Total Pageviews

Friday, 23 September 2011

இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா?.!



பாரதியார் ஒரு வேறுபாடான பாவலர்.

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் வரும் என்போரும் பலர்.

இவ்விரண்டு முனைகளிலிருந்து நாம் ஒரு தமிழ்ப்பாவலனைப் பார்க்கும் போது, இந்த வகையில் சிலரும், அந்த வகையில் பலரையும் பார்க்கலாம்.

எடுத்துகாட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்லும். பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக்கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது.

பாரதியாரின் கதை வேறு.

இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார்.

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

இதில் சொல்ல வந்த கருத்து, “மனிதா, உங்களுக்குள்ளேயே வேறுபாடு பார்த்து ஒருவரை ஒருவர் வெறுக்கிறாய். நான் உங்களை விட மேல்படியில் ஏறி உலகத்தைப் பார்க்கிறேன். எனக்கு இயற்கையும் என் ஜாதி அதாவது மனிதர்கள் அனைவரும், மற்றும் காணும்பொருள்களெல்லாம் என் ஜாதி. நான் பேதம் பார்ப்பதில்லை என்கிறேன்.”

கருத்து உயர்வே என்பதில் இரு கருத்துகளுக்குமிடமில்லை. ஆனால் அதை நான் இங்கு பேசவில்லை. பேசுவது அவரின் இயலாமையேதன்னை விலக்காமல் அவருக்கு வாழ்க்கையில்லை.

இப்படியாக அவர் பாக்களெல்லாம் தான்மை விரவியிருந்தபடியே அவரின் சிறப்பான கருத்துக்கள் தமிழ் உலகுக்குச் சொல்லப்பட்டன. இதில் அவருக்கு ஒரு பிரச்சினையென்ன வென்னவென்றால், அவரால் இயல்பாக வாழ முடியவில்லை.; காண்பதெல்லாம் குறைவுகளில் தோயாமல் இல்லை என்பதே அவர் கட்சி. எனவே தன் சுற்றம், தன் இனம், தன் ஜாதியார், என்று ஒரு குற்றங்குறை பார்க்கும் பாவலர் ஆகி விட்டார்அவர் ஒரு மிஸ்ஃபிட் எனலாம்.

இப்படிப்பட்ட ஆளுமையிலே தன்னை உணர்ந்ததால், அவர் தன்னைப் பிறரிடமிருந்து மாறானவன் என்பதை உள்வாங்கி, தான் ஆயிரம்பேரில் ஒருவனாக காணாமல் போக மாட்டேன் எனவும் தன் சாதனைகள் எனக்கு எட்ட முடியும் எனவும் சொல்வதாக இப்பாடல் பாடுகிறார்

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுளன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

மற்றும் என்னை அருளுடன் படைத்து விட்டால் நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்றும் கேட்டுக்கொள்கிறார்.

இஃதெல்லாம் அவருக்குப் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்துமா ? எல்லாரும் தேடிச்சோறு நிதம் என்றுதான் இருக்கமுடியும். சின்னஞ்சிறு கதைகள் பேசாமல் தாம்பத்திய வாழ்க்கையோ குடும்ப வாழ்க்கையோ நட்பு வட்டாரமோ இல்லை. வாடித் துன்பமடைகிறோம். கிழப்பருவமெய்தி போகிறோம். இதிலன்ன தவறு? எல்லாரையும் இறைவன் எதையாவது சாதிக்கவேண்டுமென்பது கட்டாயமென்றானா ? ஏன் ஒரு நல்ல கணவனாகவோ,மனைவியாகவோ, தகப்பனாகவோ, தாயாகவோ இருக்கக் கூடாது ?

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பெண்ணிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க வேண்டியவர்கள் கேட்கும்போது, வீட்டுப்பெண், (ஹவுஸ் வைஃப்) என்று லஜ்ஜையுடந்தான் பதில் சொல்கிறாள்!. இதுபோல பலரும்.

ஏன் எல்லாரும் சாதனை சாதனை என்று பொருந்தா முடியா இலட்சியங்களோடு அலைய வேண்டும்? ஏன் ஒரு பள்ளியாசிரியையாக இருப்பது லஜ்ஜையான விசயம் ? ஒரு அரசு அதிகாரியாக இருப்பது உயர்வான விசயம்?

இத்தகைய எண்ணங்கள் எனக்கு வருகின்றன பல பதிவர்கள் மேலே சுட்டிக்காட்டிய பாரதியாரின் பாடலை தம் இலட்சியமாகப் போட்டுக் கொண்டு எழுதுவதைப் படிக்கும்போது.

இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா? இல்லை அவர் போல கட்டாயம் ஆகத்தான் வேண்டுமா ? இல்லை அவருக்குச் சரி, நமக்கு சரியா என்பதெல்லாம் சிந்தித்தார்களா ?

இன்னொரு பதிவில் அப்பதிவாளரின் இலட்சியம் இதுவாம

" வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக"

இதை எப்படி இவர் செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. செய்து விட்டால் அட்லீஸ்டு இவரை நாம் தமிழக முதல்வராக்கி தமிழ்நாட்டில் சாதி சாதிச்சண்டைகளை ஒழிக்கலாம்.

இன்னொரு பதிவரோ, தன்னை பாரதியாரின் பயங்கரவாதி என்கிறார். அதாவது பாரதியாரில் இலட்சியங்கள் அனைத்தையும் தீவிரமாகப் பின்பற்றுகிறாராம். பதிவில் காதல் கவிதைகள் மட்டுமே போட்டு வருகிறார்.

இவர்களை என்ன சொல்வது ? ஒன்று சொல்லலாம். பள்ளியில் படிக்கும்போது வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என கனவு, பெரியவரானதும் அக்கனவுகள் வெறுங்கனவுகளே என பறந்தோடிப் போய் விடுகின்றன‌. வாழ்க்கையின் எதார்த்தங்கள், கசப்பான உண்மைகளைப் உய்த்துணர்ந்து மாறிக்கொள்கிறோம்.

மாறவில்லையென்றால் ?

இப்படிதான், பாரதியாரின் 'தேடிச்சோறு' பாவைப் பாராயணம் செய்தி நித்தம் நித்தம் பூஜையறையில் ஓதிக்கொள்ளலாம்.

5 comments:

SURYAJEEVA said...

எல்லாம் ஒரு விளம்பரம் தான் தோழி,
உதாரணத்திற்கு வண்டியில் குழந்தைகள் படத்தை போடுவது, மனைவியின் பெயரை எழுதுவது, நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்வது, நாமம் போட்டுக் கொள்வது...
குழந்தைகள் படம் போடவில்லை என்றால் பிள்ளைகள் மேல் பாசம் இல்லை என்று அர்த்தமா?
மனைவியின் பெயரை வண்டியில் எழுதவில்லை என்றால் மனைவியின் மீது காதல் இல்லை என்று அர்த்தமா?
நாமம் பட்டை போடாமல் விட்டால் பக்தி இல்லை என்று அர்த்தமா?
இப்படி ஒவ்வொரு செய்கையிலும் மனிதன் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்கிறான்...
அது போல் பதிவர்களும், தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ள பல பிரபலங்களை இணைத்துக் கொள்கிறார்கள்...
அப்படி அவர்கள் தங்கள் பதிவுகளில் இதை எல்லாம் போடாமல் இருந்திருந்தால், இன்று உங்கள் பதிவில் இடம் பிடித்திருக்க முடியாது அல்லவா?

காவ்யா said...

நன்றி உங்கள் கருத்து

Rajan said...

பாரதியார் தன்னை ,தனது எண்ணங்களை மட்டும் சொன்னவர்.
அவர் வாழ்ந்த சூழல் சுந்திர போராட்ட காலம். அப்போதைய மனிதர்களின் நிலைமையை தான் எடுத்துரைத்தார். அவர் மட்டும் கவிதை எழுதவில்லையே, பல்லாயிரக்கணக்கானோர் எழுதினார்கள், எழுதுகிறார்கள். எதிர்மறை எண்ணங்களோடு அணுகுவது உங்கள் குணம் போலும். இவ்வளவு பேசும் நீங்கள் முதலில் தங்களை வெளிபடுத்திகொண்டு பின்னூட்டம் தரவும்.

காவ்யா said...

என் பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லவில்லையே ? என் கட்டுரைகள் திண்ணையில் வெளியாகி தற்போது வருகின்றன. இப்பாரதியார் கட்டுரையும் வரும் மறுவாரம். I have given my mobile and residential address to them. U can make enquiries with them to get my address etc.

என் இக்கட்டுரையின் கருப்பொருள், பாரதியார் வேறு; நாம் வேறு என்பதே. அவர் எக்காலத்தில் என்ன எழுதினார் என்றல்ல என் ஆராய்ச்சி.

என பெயர் உங்களுக்குத்தெரிந்துவிட்டால் என் கட்டுரையின் கருத்துக்கள் சரி அல்லது தவறென்றாகி விடுமா ? கடையில் பொருள் வாங்குகிறீர்கள். பொருளின் தரத்தைப்பார்ப்பீர்களா அல்லது கடைக்காரன் கருப்பா சிவப்பா என்று பார்ப்பீர்களா ராஜன் ?

காவ்யா said...

என் திண்ணைக்கட்டுரை 'இலக்கியவாதிகளின் அடிமைகள்' உங்களைப்போன்றவர்களப்பற்றியே ராஜன்.