Total Pageviews

Thursday, 1 September 2011

பிள்ளையார் சதுர்த்தி பயம்













சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று.  பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, ஒலி கொண்டாட்டங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழ்னிலை மாசுபடுதல் என்றெல்லாம் கிடையாது. சிறுவர்கள் விரும்பும் காரணம் கொழுக்கட்டை போன்ற வினோதமான தின்பண்டங்கள். பலவிதமான கொழுக்கட்டைகள்.  ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்குமேல். அவைகள் மற்ற வீட்டுக்குக் கொழுக்கட்டைகளோடு பரிமாறிக் கொள்ளப்படும். பனையோலைக் கொழுக்கட்டை பட்டணங்களில் கிட்டாது. கிராமங்களில் மட்டுமே.
இன்னொரு காரணம் வணங்கப்படும் தெய்வம். அதன் உருவம் சிறுவர்களுக்குப் பிடிக்கும்.  "ஆனை வடிவில் ஒரு தெய்வமா ?" என்று மெல்ல நகைக்கலாம். அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும்தான்.  “அம்மா குளிக்கப் போகிறேன். ஆரும் வராமல் பார்த்துக்கொள்ளடா செல்லம்” என்று அம்மா சொன்னவுடன் எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வோம். இத்தெய்வத்தின் கதையில் அது வரும். எனவே சிறுவர்கள் ஒரு மனயிணைப்பைப் (relating to) பெறுகிறார்கள் இத்தெய்வத்திடம். மேலும் தாயின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தாயைப்போலவே தனக்கு வரும் மனைவி குணத்தில் இருக்கவேண்டுமென்று சொல்லும் கதை. தாயிற்சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.  என்றெல்லாம் வரும் பழமொழிகளை இத்தெய்வத்தின் கதை நிரூபிக்கிறது.  ஆனைமுகம் கோபத்தைக் காட்டவியலாது. எனவே எப்போது ஒரு சாந்த முகம்.
எனவே இப்படிப்பட்ட மனச்சாய்வுகளை (predilections) உருவாக்குவதால் இத்தெய்வத்துக்கும் சிறுவர்களுக்கும் பிணைப்பு. இதை மேலும் இணைப்பதற்காக “இவர் ஞானக்கடவுள் எனவே இவரை வணங்கினால தேர்வில் வெற்றிபெறலாம்” என்றும் நினைத்து தேர்வு நாட்களில் பிள்ளையார் கோயில்களில் மாணவர் கூட்டம் திரளும்.

பிள்ளையார் என்றால் இப்படிப்பட்ட நினைவுகள்தான் சின்னவயதிலே வரும். பிள்ளையரைத் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை வைத்து பத்து நாட்கள் ஆராதனை செய்து கடலில் கரைக்கும் வழக்கம் அப்போது இல்லை.
இன்றைய நிலையென்ன? பலபலவடிவ பிள்ளையார்களுக்குப் பலபலவிடங்களில் பத்து நாட்கள் ஆராதனை. இது மராட்டிய பார்ப்பனர்கள் கண்டுபிடித்தது. திலக்கே இதை முதலில் செய்தார். பிள்ளையார் மராட்டியர்களின் இஷ்ட தெய்வம். துர்கை வங்காளிகளுக்கு. அவர்களும் இப்படிப் பத்துநாள் வைபவம் ‘துர்கா பூஜா’ என்ற பேரில் எடுப்பார்கள், இறுதிநாளில் கடலில் சிலைகளைக் கரைப்பார்கள். மேளதாளம், தாரை தப்பட்டைகளோடு சிலைகள் கடலை நோக்கியோ அல்லது ஹூக்ளி நதியை நோக்கியோ பயணிக்கும்
தமிழ்நாட்டிலும் துர்க்கை வழிபாடு தொன்று தொட்டு வருவது. பாலையும் பாலைசேர்ந்த நிலத்தில் கொற்கையை வழிபட்டார்கள் தமிழர்கள் என்கிறார் தொல்காப்பியர். கொற்கையே துர்கை.

தமிழர்கள் வங்காளப் பழக்கத்தை ஏன் நகலெடுக்கவில்லை? பிள்ளையார் வழிபாட்டில் மட்டும் ஏன் மராட்டிய வழக்கம் ? காரணம், பிற மதங்களுக்குச்சவால் விடும் முகமாக திலக் பிள்ளையாரை வைத்து மத அரசியல் செய்தார். இன்றும் செய்யப்படுகிறது. அஃதை இங்கும் செய்தால் மத அரசியல்வாதிகளுக்கு இலாபம் கிடைக்கும் என்பதாலே.  பிள்ளையார் ஊர்வலம் வெறும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவே. தனிமனிதனின் உணர்ச்சிகளையல்ல. தனிமனிதர்கள் கூட்டமாகச்ச் சேரும்போது ஆங்கு நிகழ்பது கூட்டச்சிந்தனை. கூட்டுணர்வு. மாப் சைக்காலஜி. mob pshchology. அதை இப்படியும் அப்படியும் அக்கூட்டத்தை வழிநடத்துவோர் தமக்கேறப மாற்றிவிடலாம் இலகுவாக. இப்படிப்பட்ட ஊர்வலங்கள் படாடோபமாக அட்டகாசமாக மாற்றல் கூட்டுணர்வை மேலும்மேலும் உயர்த்தவே.  இங்கு எப்படி ஆன்மிகம் வரும்?
இதன் விளைவு: மதக்கலவரங்கள் வெடிக்கும் அபாயங்கள். அவைகளத் தடுக்க, வெடித்தால் அடக்க அரசு காவலர்களைக் பத்துநாட்கள் குமிக்கிறது,  குறிப்பாக, கடைசி நாளில் பிள்ளையார்ச் சிலைகள் ஊர்வலமாக தாரை தப்பட்டைகள் முழக்கத்தோடு எடுத்துச் செல்லும்போது, எங்கு எப்போது கலவரம் வெடிக்குமோ? பழிக்குப்பழியாக‌ நம்வீடும் கொளுத்தப்படுமோ என்ற பயம்.  கலவரம் வெடித்தால், வீடுகள் கொழுத்தப்படும். எதிர்வினைகள் நேரும். உயிர்ப்பலிகள் விழும். இவற்றை  வைத்துக்கொண்டு, மக்களிடையே பிரிவினைகளை உருவாக்கி தேர்தலில் வெற்றியடையலாம்.
எனவே ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி என்பது இன்று ஒரு பயங்கர நாளாகி விடுமோ எனற அச்சத்தில் கழிகிறது.

                                                                             ****

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் பக்தன்

சி.பி.செந்தில்குமார் said...

?>>>அம்மா குளிக்கப் போகிறேன். ஆரும் வராமல் பார்த்துக்கொள்ளடா செல்லம்” என்று அம்மா சொன்னவுடன் எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வோம். இத்தெய்வத்தின் கதையில் அது வரும். எனவே சிறுவர்கள் ஒரு மனயிணைப்பைப் (relating to) பெறுகிறார்கள்

பால்ய கால படிப்பு நினைவுகள்

Vetirmagal said...

அருமையான கருத்து, அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

வணக்கம்.

காவ்யா said...

நன்றிகள் பின்னூட்டமிட்டோருக்கு.

இப்பதிவு இவ்வாரத் திண்ணை இணைய பத்திரிக்கையில் போடப்பட்டிருக்கிறது