Total Pageviews

Showing posts with label பழந்தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label பழந்தமிழ் இலக்கியம். Show all posts

Friday, 14 October 2011

இருந்தமிழே உன்னால் இருந்தேன் !

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

இந்த வரிகளை ஒரு தமிழ்ப்பேராசிரியர் முன்னுரையாகச் சொல்லிவிட்டுத் தன் தலைமையுரையைப் பேசத்தொடங்கினார்:  ‘இவ்வரிகள் எந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன;  ஆசிரியர் யார் ? என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.  எழுதியவருக்குத் தமிழ்மேல்தான் என்னே பக்தி! என்னே பாசம்!! 

பேசியவர் அப்போது தில்லிப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராயிருந்த திரு பாலசுப்பிரமணியம் என்று நினைவு.
இது நடந்தது தில்லியில் கான்ஸ்டிடியுசன் கிளப்பில் பலவாண்டுகளுக்குமுன் நடந்த ஒரு தமிழ்க் கலைவிழாவில்.  இது எந்த நூலில் உள்ள வரிகள் என்றெனக்கு முன்னரே தெரியும். அந்தப் பேராசிரியருக்குக்கீழ் வேலைபார்க்கும் தமிழாசிரியர் என்னிடம் உரையாட வந்த போது நான் சொன்னேன். அவர் தன் தலைவரிடம் சொன்னாரா என்று தெரியாது. இருக்கட்டும்.

இந்த வரிகள் மனதை மயக்குவன. இவ்வரிகளின் ஆசிரியர் கண்டிப்பாகத் தமிழ்மேல் தணியாக்காதல் கொண்டவர் என்பது தேற்றம். ஆனால், அவர் யார் என்றெவராலும் அறிய முடியவில்லை.  மேலே நான் எழுதிய கண்ணி இன்னூலைப் பிரபலபடுத்தியது. கண்ணியென்றால் ஈரடிகள் கொண்டது பா. இறுதிவரியின் இறுதிச்சொல் மறு கண்ணியின் முதல் வரியாக வரும். அந்தாதி போல. இன்னூல் யாக்கப்பட்ட காலம் 17ம் நூற்றாண்டென ஊகிக்கப்படுகிறது. ஆசிரியர் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டவைகளை விவரிக்கிறார்; பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள திருவிளையாடல் புராணம் கி.பி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். மேலும், 251ம் கண்ணியில், ‘துரை’ என்ற சொல்லும் இன்னூலில் காணப்படுகிறது 57ம் கண்ணியில் இரட்டையர்கள் பாடிய திருவாமாத்தூர் கலம்பகம் பற்றிய செய்தி குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் கோர்த்துப்பார்க்கும்போது, இந்நூல் 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் எனச் சொல்லமுடியும். உலகுக்குத் தெரியா நூலாகவே இருக்க, உ.வே.சா 1930ம் ஆண்டு முதல் முதலாக இன்னூலை மதுரையில் கண்டெடுத்தார். அவ்வாண்டு இன்னூல் வெளிச்சத்து வந்து தமிழறிந்தோரைப் பரவசத்துக்குள் ஆழ்த்தியது.  

இன்னூல் ஒரு சிற்றிலக்கிய வகை னூல். உலா, பள்ளு போன்று.  தூது இலக்கியம் என்ற வகையில் இது சேரும். தன் காதலனின் அன்பை நாடிப்பெற எதையாவதைத் தூது அனுப்புவதே தூது இலக்கியமாகும்.
பழந்தமிழ் நூல்களிலும், பெருங்காப்பியங்களிலும் தூது பற்றி அமைந்த பாடல்கள் காணப்படினும் அவை சிற்றிலக்கிய வகையுள் ஒன்றான தூது நூலினின்று மாறுபட்டவை. பழம்பாடல்கள் பெரிதும் அரசியற் காரணங்களுக்காகவும், பொருள் இரந்தும், நட்பு நாடியுமே தூதுரைக்கின்றன. காதல் தூதுகள் அரிதாகவே காணப்படுகின்றன.  சீவக சிந்தாமணியில் குணமாலை என்பாள் ஒரு கிளியைச் சீவகனிடம் தூது விடுப்பதாகவும், பெருங்கதையில் உதயணன் ஒரு மானைத் தூதனுப்புவதாகவும் ஓரோவிடங்களில் மட்டுமே காதல் தூதுப்பாடல்கள் கிடைக்கின்றன. பிற்கால நூல்களுள் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் ஓரு உறுப்பாகச் சில தூதுப்பாடல்கள் காணப்படுகின்றன. இவ்வாறே ஆண்டவன் அருள் நாடும் அடியவனின் அருட்காதலை யாசித்துத் தூதனுப்பும் பாடல்களைத் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களுள் காண்கிறோம். பராங்குச நாயகி, ஒரு அன்னத்தை திருக்குறுங்குடி நம்பியிடம் தூதுவிட்டு அவனின் காதலை யாசிப்பதாக நம்மாழ்வார் எழுதும் பாசுரங்கள் வைணவர்களிடையே வெகுப்பிரசித்தம்.

உயர்திணப்பொருட்கள், அஃறிணைப்பொருட்கள் என்று அனைத்தையும் தூதுயனுப்புவார்கள் என்று இந்த வெண்பா சொல்கிறது இலக்கண விளக்க நூற்ப்பா என்ற நூலில்:

“பயில்தரும் கவிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்நுறு தூதுஎனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே”

அன்னம், மயில், கிளி, மேகம், மைனா, தோழி, குயில், தன் நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய பத்துமே தூது செல்ல உகந்தவை என்று இப்பழந்தமிழ்ப்பாடல் சொல்கிறது இரத்தினச்சுருக்கம் என்ற் நூலில்:

“இயம்புகின்ற காலத்து எகினம்மயில் கிள்ளை
பயம்பெறு மேகம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை” 
எகினம் = அன்னம்.

(இதன் இரண்டாம் பாகம் வரும்.)