பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள். சிலர் கட்டுரைகளும் வரைவார்கள். இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர்களுள் சிலர் விட்டு விடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போது. சிலர் தொடர்கிறார்கள். சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள். சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுக் கொண்டு நிலைக்கிறார்கள். சிலர் பாடல்களின் பெருந்தத்துவங்களை அழகு தமிழில் சொல்லித் தன் ஆளுமையையும் அப்பாடல்களில் சொன்னது போல இருக்கும் என்பதாக மக்களை மயக்குகிறார்கள். இவர்களில் திரைப்பட பாடலாசிரியர்கள் உண்டு. இவர்கள் திரைப்படக் கதாநாயகர்களைப் போல புகழ் பெறுகிறார்கள்.
இன்று இவர்களில் சிலர் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். தாங்களாகவே வலைபதிவுகளைக் கணணி வல்லுனர்களின் மூலம் அட்டகாசமாக வடிவமைத்து எழுதி வருகிறார்கள். ஏற்கனவே இவர்களில் இரசிகர்கள் இங்கே குழுமுகிறர்கள். ஒரு 'கல்ட்' (cult) உருவாக்கப்படுகிறது. இரசிகர்கள் இவர்களின் ஒவ்வொரு பதிவையும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். பதிவை எதிர்ப்போரை அடியாட்கள் போல நின்று தாக்குகிறார்கள்.
இதெல்லாம் பரவாயில்லை. இவ்வெழுத்தாளர்கள் தங்கள் பாப்புலாரிட்டியப் பயன்படுத்தி ஒரு சார்பு நிலையைப் போற்றியும் இன்னொரு சார்புனிலையை இகழ்ந்தும் எழுதுகிறார்கள். இரசிகர்களின் சிந்தனையை ஓர்வழிப்படுத்துகிறார்கள். (radcalisation).
எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைத்திறமையில் புதினங்களைப் படைத்து தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்தபின், ஒரு பிராண்டு நேமை (brand name) பெற்றுவிடுகிறார்கள். அதன் பின் அப்படிப்பட்ட பிராண்டு நேமுள்ள எழுத்தாளர் என்ன எழுதினாலும் மக்களில் பலர் படிக்கிறார்கள். சிலர் படிக்குமுன்பே அப்படைப்பு உயர்வாகத்தான் இருக்கும் என முடிவுகட்டி விடுகிறார்கள். அவ்வெழுத்தாளரின் படைப்பு விவாதக்களங்களில் பேசப்படுகிறது. எனவே புகழ் ஒரு படைப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது.
இதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவ்வெழுத்தாளர் சமூகப்பிரச்சினைகளில் கலந்து ஒரு முடிவை வைக்கும்போது அது போற்றப்படுகிறது. அந்த முடிவு சரியா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுக்கும் தன்மையை, வன்மையை, வாசகர்கள் பரிகொடுத்து விடுகிறார்கள். அவ்வெழுத்தாளர் சொன்னவை மாபெரும் தத்துவங்களாகிறது. எடுத்துக்காட்டாக, ஜெயகாந்தன் சொன்னதாக ஒருவர் திண்ணையில் எழுதியது: மரண வீடுகளில் சம்பிரதாயத்துக்காகத்தான் அழுகிறார்களாம் !
எழுத்தாளர்கள் எல்லாரும் அறிவாளிகளல்ல. முட்டாள்களுமல்ல. நம்மைப் பொறுத்தவரை 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பதை உணரவேண்டும். எழுத்தாளரின் பார்வையில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் அப்படியென்றால், நாம் பார்த்த வாழ்க்கை நமக்கு என்ன கற்றுத் தந்தது எனபதையறியும்போது அஃது எழுத்தாளன் சொன்னது அவனுக்கு மட்டுமே சரியாகலாம் என்ற படிப்பினையை நமக்குப் பலவேளைகளில் தரும்.
நாமே நம் எண்ண உலகில் நடுக்கரு. Man is the measure of all things. You are the nucleus, and everything revolves around you. நம்மிலிருந்தே வாழ்க்கையை நோக்க வேண்டும்.
எழுத்தாளர்களின் புதினங்களைப் படிப்போம். நன்றாக இருந்தால் போற்றுவோம். அதற்கு மேல் அவர்களிடம் போய் 'எங்களுக்கு வாழ்க்கைத் தத்துவங்களைச்' சொல்லித்தாருங்கள்; அல்லது நீங்கள் சொன்னவை அனைத்துமே போற்றத் தகுந்த வாழ்க்கைத் தத்துவங்கள் என்றெல்லாம் சொல்லி மாய்வது, உங்களுக்கென்று ஒரு ஆளுமையே இல்லை அல்லது சுயசிந்தனையே இல்லை என்றுதான் பொருள்.
No comments:
Post a Comment